Posts Tagged ‘உலக வரலாறு’

இந்தியா- பாகிஸ்தான் போர்; முறியடித்தார் சாஸ்திரி

நேரு அகில உலகப் புகழ் பெற்ற தலைவராகத் திகழ்ந்தார். சர்வதேசப் பிரச்சினைகளில், நேருவின் கருத்துக்கு உலக நாடுகள் மதிப்பளித்தன. நேருவுக்குப்பின் ஆட்சிக்கு வந்த சாஸ்திரி, திறமையாக செயல்படுவாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. ஆனால், அனைவரும் வியக்கும் வகையில் திறமையாக ஆட்சி புரிந்தார் சாஸ்திரி. 1958 அக்டோபர் 8_ந்தேதி ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய அயூப்கான், காஷ்மீரைக் கைப்பற்ற சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் படைகள் அடிக்கடி எல்லையைத் தாண்டி வந்து இந்தியப்பகுதியை நோக்கி பீரங்கித் தாக்குதல் நடத்தி வந்தன. 1965_ம் ஆண்டு, ஏப்ரல், மே மாதங்களில் காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதிக்குள் பாகிஸ்தான் படையினர் ஊடுருவி வந்தனர். ஆகஸ்ட் 8_ந்தேதி, ஆயுதம் தாங்கிய 3 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் கொரில்லா போரில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி கொடுத்து, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா முடிவு செய்தது. குஜராத் மாநில எல்லையில் உள்ள கட்ச் ரண் பகுதி, சாம்ப் _ ஜாரியன், சியால்கோட் பகுதி _ லாகூர் பகுதி ஆகிய மூன்று இடங்களில் இந்தியப் படைகள் ஒரே நேரத்தில் மும்முனைத் தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து, செப்டம்பர் 5_ந்தேதி, இந்தியாவுக்கு எதிராக அïப்கான் போர்ப் பிரகடனம் செய்தார்.

இந்தியா _பாகிஸ்தான் போர் முழு வீச்சில் நடந்தது. இந்தியப் படைகள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானில் நுழைந்து, லாகூரை நெருங்கின. விமானங்களும் குண்டு வீச்சு நடத்தின. 9 லட்சம் இந்திய வீரர்கள் இந்தப்போரில் ஈடுபடுத்தப்பட்டனர். போரில் பாகிஸ்தான் படைகள் பெரும் தோல்வியைச் சந்தித்துப் பின்வாங்கின.

பாகிஸ்தானின் பல ராணுவத் தளங்கள், குண்டு வீச்சில் நாசம் அடைந்தன. இந்தச் சமயத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை எச்சரித்து, சீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. வடகிழக்கு எல்லைப்பகுதியில் (நேபா) குவித்து வைத்துள்ள படைகளை இந்தியா 48 மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்பதே சீனா விடுத்த எச்சரிக்கை.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் போரில் குதிக்கும் என்பதே, சீனா விடுத்த அறிவிப்பின் உள் அர்த்தமாகும். இதுவரை நடுநிலைமை வகித்து வந்த ரஷியா, சீனாவின் மிரட்டலைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ஆதரவாகப் பொங்கி எழுந்தது. “இந்தியாவை மிரட்டுவது பாகிஸ்தானுக்கு ஊக்கம் அளிப்பதாகும். எரிகின்ற தீயில் எண்ணையை ஊற்றும் செயலை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தியா _ பாகிஸ்தான் போரில் சீனா தலையிட்டால், ரஷியா வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது” என்று ரஷிய கம்ïனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரஸ்நேவ் எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே ஐ.நா. சபை செப்டம்பர் 21_ந் தேதி கூடி, போரை உடனே நிறுத்தும்படி இந்தியாவையும், பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இரு தரப்புப் படைகளும் போரை உடனே நிறுத்தி விட்டு, ஆகஸ்ட் 25_ந்தேதி இருந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. தீர்மானத்தை இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. 18 நாட்களாக நடந்த யுத்தம் செப்டம்பர் 22_ந்தேதி ஓய்ந்தது. இரு தரப்புப் படைகளும் ஆகஸ்ட் 25_ந்தேதி இருந்த இடத்துக்குப் பின்வாங்கிச் சென்றன.

(mli)

தாஷ்கண்ட் நகரில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா _ பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தபோதே, அதை நிறுத்துவதற்கு ரஷியப் பிரதமர் கோசிஜின் முயற்சி மேற்கொண்டார். போரை நிறுத்திவிட்டு சமரசப் பேச்சு நடத்தும்படியும், அதற்காக ரஷியாவுக்கு வருமாறும், இந்தியப் பிரதமர் சாஸ்திரிக்கும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானுக்கும் கடிதங்கள் எழுதினார்.

செப்டம்பர் 22_ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சமரசப் பேச்சுக்கு சாஸ்திரி சம்மதம் தெரிவித்தார். அžப்கானும் சம்மதிக்கவே, இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை கோசிஜின் செய்தார். ரஷியாவில் உஸ்பெக்கிஸ்தான் குடியரசின் தலைநகரான தாஷ்கண்ட் நகரில் சாஸ்திரியும், அயூப்கானும் சந்தித்துப் பேசுவதென்று முடிவாயிற்று.

1966 ஜனவரி 3_ந்தேதி தாஷ்கண்டில் இந்தியா _பாகிஸ்தான் பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆயிற்று. பாகிஸ்தான் தரப்பில் அதிபர் அïப்கானுடன் வெளிநாட்டு இலாகா மந்திரி பூட்டோ கலந்து கொண்டார். இந்தியாவின் சார்பில் பிரதமர் சாஸ்திரியுடன் ராணுவ மந்திரி ஒய்.பி.சவான் கலந்து கொண்டார். பேச்சுவார்த்தையில் கோசிஜின் கலந்து கொள்ளவில்லையென்றாலும், முட்டுக்கட்டை ஏற்பட்டபோதெல்லாம் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசி, பேச்சுவார்த்தை சுமுகமாக முன்னேற உதவினார். இறுதியில், ஜனவரி 10_ந்தேதி உடன்பாடு ஏற்பட்டு, சமரச ஒப்பந்தத்தில் சாஸ்திரியும், அயூப்கானும் கையெழுத்திட்டனர். சாட்சியாக கோசிஜின் கையெழுத்துப்போட்டார். “இந்தியாவும், பாகிஸ்தானும் எல்லாப் பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். யுத்தத்தில் ஈடுபடக்கூடாது.

போர்க்கைதிகளை, அவரவர் நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கவேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, உயர்மட்டக்குழுக்களை அமைக்கவேண்டும்” என்பவை தாஷ்கண்ட் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும். பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதையொட்டி, அதில் பங்கு கொண்ட அனைவருக்கும் கோசிஜின் விருந்து அளித்தார். அதில் கலந்து கொண்டபோது கூட சாஸ்திரி பூரண உடல் நலத்துடன் இருந்தார். பின்னர் தாஷ்கண்டில் இருந்து டெல்லிக்குப்போன் செய்து, மூத்த மந்திரி நந்தாவுடன் பேசினார். தாஷ்கண்ட் ஒப்பந்தம் பற்றிய விவரங்களைக் கூறினார். நந்தாவுடன் பேசும்போது, சாஸ்திரி மகிழ்ச்சியுடன் இருந்தார். “தாங்கள் யுத்த காலத் தலைவர் மட்டுமல்ல, சமாதானத் தலைவரும்கூட” என்று நந்தா கூறினார். ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படியும் சாஸ்திரியிடம் நந்தா கேட்டுக்கொண்டார்.

லால்பகதூர் சாஸ்திரி _ அயூப்கான் பேச்சுவார்த்தை முடிவில், “தாஷ்கண்ட் பிரகடனம்” வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:-

“இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் அதிபரும் தாஷ்கண்ட் நகரில் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை விவாதித்த பிறகு, தங்கள் நாடுகள் இடையே இயல்புநிலை, சமாதான தொடர்பு ஆகியவற்றை மீண்டும் ஏற்படுத்துவது என்றும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே நட்புறவையும் நல்லெண்ணத்தையும் உண்டாக்குவது என்றும் உறுதி பூண்டுள்ளதை பிரகடனப்படுத்துகிறார்கள். அந்த குறிக்கோளை அடைவது, இந்தியா _ பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 60 கோடி மக்களின் நலனுக்கு முக்கியமானதாகும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.” இவ்வாறு தொடங்கும் ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட 9 அம்சங்கள் உள்ளன:-

(1) ஐ.நா. சபையின் சாசனப்படி அண்டை நாடுகளுக்கான நல்லுறவை இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்படுத்த தேவையான எல்லா முயற்சிகளையும் செய்வது என்று இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் அதிபரும் ஒப்புக்கொள்கிறார்கள். தகராறுகளை சமாதானமாகத் தீர்த்துக் கொள்வது என்றும், அதற்காக ராணுவ பலத்தை பயன்படுத்துவது இல்லை என்றும் அவர்கள் உறுதி கொள்கிறார்கள். தொடர்ந்து யுத்த பயம் இருந்து வருவது சமாதானத்துக்கும், இரு தேசங்களின் மக்களின் நலனுக்கும் உகந்தது அல்ல என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையைக் கொண்டு, காஷ்மீர் தகராறு விவாதிக்கப்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் நிலையை எடுத்துக் கூறினர்.

(2) இரு தரப்பினரும் ஆயுதம் தாங்கிய தங்கள் படைகளை பிப்ரவரி 25_ந்தேதிக்குள் வாபஸ் வாங்கி, 1965 ஆகஸ்ட் 5_ந்தேதி இருந்த நிலைக்குச் சென்று விடுவது என்றும், போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பது என்றும் இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் அதிபரும் ஒப்புக்கொண்டார்கள்.

(3) இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தானும், பாகிஸ்தான் உள்விவகாரங்களில் இந்தியாவும் தலையிடக்கூடாது என்ற கொள்கைப் படி, இரு நாடுகள் இடையே தொடர்பு ஏற்படுத்த இந்தியப் பிரதமரும், பாகிஸ்தான் அதிபரும் ஒப்புக் கொண்டனர்.

(4) இரு தேசங்களும் ஒன்றை ஒன்று தாக்கும் பிரசாரத்தை தடுப்பது என்றும், நட்புறவை வளர்க்கும் பிரசாரத்தை ஆதரிப்பது என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

(5) இந்திய தூதர் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் தூதர் இந்தியாவுக்கும் மீண்டும் சென்று பொறுப்பேற்று, இரு நாடுகளுக்கும் இடையேயான தூதர் உறவை வழக்கமான முறையில் இயங்கச் செய்ய முடிவு செய்யப்பட்டது.

(6) பொருளாதார, வியாபார, செய்தி, கலாசார தொடர்பை வளர்க்கவும், அவை குறித்து செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

(7) யுத்தக் கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையிடப்படும்

(8) அகதிகள் பிரச்சினை பற்றி தொடர்ந்து விவாதிக்கப்படும். போரின்போது இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் குறித்து விவாதிப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

(9) இரு நாடுகளுக்கும் இடையே உள்ள விவகாரங்கள் குறித்து, தலைவர்கள் மட்டத்திலும் அதிகாரிகள் மட்டத்திலும் விவாதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அவை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தங்கள் அரசுகளுக்கு ஆலோசனை கூற, இந்தியா _ பாகிஸ்தான் கூட்டுக் கமிட்டி ஒன்றை அமைப்பதன் அவசியத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேற்கண்டவாறு “தாஷ்கண்ட் பிரகடன”த்தில் கூறப்பட்டுள்ளது. தாஷ்கண்ட் மாநாட்டுக்கு நட்புறவோடும், பெருந்தன்மை யோடும் ஏற்பாடு செய்த ரஷிய பிரதமர் கோசிஜின்னுக்கு சாஸ்திரியும், அயூப்கானும் நன்றி தெரிவித்துள்ளனர். நட்புறவின் சின்னம் தாஷ்கண்ட் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய சாஸ்திரிக்கும், அயூப்கானுக்கும் ரஷியப் பிரதமர் கோசிஜின் நன்றி தெரிவித்தார். “இந்தியா _ பாகிஸ்தான் நிரந்தர நட்புறவுக்கு இந்த ஒப்பந்தம் ஒரு சின்னமாக விளங்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

(mli)

இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண, அன்றைய தமிழக முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆருடன் இணைந்து, சமரச முயற்சியில் ராஜீவ் ஈடுபட்டார். இதன் விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாயிற்று.

இலங்கைத் தலைநகரான கொழும்பில் 29_7_1987_ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. இதில் ராஜீவ் காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, எம்.ஜி.ஆரை ராஜீவ் காந்தி அழைத்தார். ஆனால், எம்.ஜி.ஆர். இலங்கை செல்ல இயலாமல் இருந்ததால், தன் சார்பில் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அனுப்பி வைத்தார்.

இந்த ஒப்பந்தத்தை இலங்கை பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத் முதலி ஆகிய இருவரும் ஏற்கவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:_ (1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். ராணுவத் தினரும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்த வேண்டும்.

(2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

(3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப்புலிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.

(4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே மாநிலமாக (“தமிழ் மாநிலம்”) அமைக்கப்படும். இந்த மாநில சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதம் ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் 31_ந்தேதிக்கு முன் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.

(5) இந்த மாநிலத்துக்கு முதல்_ அமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார். “வடக்கு பகுதியுடன் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா?” என்று, 1988_ம் ஆண்டு கடைசிக்குள் கிழக்குப் பகுதியில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். கலவரம் காரணமாக இலங்கையில் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.

(6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.

(7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள்.

(8) இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும்.

(9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.

(10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும்.

இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாள், ராஜீவ் காந்தி டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்பி வைக்கும் வகையில், ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் மாளிகையில் இலங்கை கடற்படை அணி வகுப்பு நடந்தது. அந்த அணி வகுப்பு மரியாதையை ராஜீவ் காந்தி ஏற்க சென்றார். முதல் வரிசையில் நின்ற வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுவிட்டு திரும்ப முயன்றார். அப்போது இலங்கை கடற்படை சிப்பாய் ஒருவன் திடீரென்று பாய்ந்து வந்து, தனது துப்பாக்கியை திருப்பி, துப்பாக்கிக் கட்டையால் ராஜீவ் காந்தியை தாக்கினான்.

துப்பாக்கிக் கட்டை, ராஜீவ் காந்தியின் இடது தோளில் பட்டு தரையில் விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோன ராஜீவ் கொஞ்சம் முன்னே வேகமாக நடந்து சென்று திரும்பி பார்த்தார். இதற்குள், ராஜீவ் காந்தியின் பாதுகாப்புக்குச் சென்ற அதிகாரிகள் பாய்ந்து சென்று, துப்பாக்கியால் தாக்கிய சிப்பாயை கீழே தள்ளினார்கள்.

இலங்கை கடற்படை தளபதியும் விரைந்து வந்து, அந்த சிப்பாயைப் பிடித்துக்கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடத்திற்கு 20 மீட்டர் தொலைவில் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா, அவரது மனைவி, ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர்.

அந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி சென்றார். அங்கு ஜெயவர்த்தனாவிடம் விடைபெற்றுக்கொண்டு காரில் ஏறி விமான நிலையத்துக்குச் சென்றார். ராஜீவ் காந்தியை தாக்கியவன் பெயர் விஜிதா ரோதன். இவன் முன்பு “ஜனதா விமுக்தி பெரமுனா” என்ற சிங்கள தீவிரவாத அமைப்பில் இருந்தவன். ராஜீவ் காந்தியின் தலையை தாக்குவதே அவன் நோக்கம். சற்று குறி தவறி தோளில் பட்டதால் ராஜீவ் உயிர் தப்பினார். ராஜீவ் காந்தி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா செய்தி அனுப்பினார். ரேடியோவிலும் பேசினார்.

(mli)

ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் சம்மதம்

ராஜீவ் காந்தி _ ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கையில் அமைதியை நிலை நாட்ட “இந்திய அமைதிப்படை” சென்றது. 2 கப்பல்களில் இந்திய ராணுவத்தினர், கொழும்பு போய்ச் சேர்ந்தார்கள். விமானங்களிலும் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் அமைதிப்படையின் பணி எளிதாக இருக்கவில்லை. ஆயுதங்களை ஒப்படைக்க விடுதலைப்புலிகள் மறுத்தனர். அப்போது பிரபாகரன் டெல்லியில் இருந்தார். அவர் இலங்கைக்குத் திரும்பிய பிறகுதான் ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றி முடிவு செய்வோம் என்று அறிவித்தனர். இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையினருக்கு சில இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டபோதிலும் சில இடங்களில் எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

ராஜீவ் காந்தியுடன் பேச்சு நடத்த டெல்லி சென்றிருந்த பிரபாகரன் அங்கே காவலில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால்தான் ஆயுதங்களை ஒப்படைப்பது பற்றி எந்த முடிவுக்கும் வரமுடியும் என்று விடுதலைப்புலிகள் அறிவித்தனர். பிரபாகரன் என்ன ஆனார் என்பதே மர்மமாக இருந்தது. திடீரென்று பிரபாகரன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆரை ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தார். இருவரும் 45 நிமிட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பின்னர் இந்திய விமானப்படை விமானம் மூலம் பிரபாகரன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் சென்றடைந்த பிரபாகரன் தனது தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆயுதங்களை விடுதலைப்புலிகள் ஒப்படைப்பதற்கு “கெடு” விதிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு முடிவடையும் நாள் நெருங்கிக் கொண்டிருந்ததால் ராஜீவ் காந்திக்கு பிரபாகரன் ஒரு செய்தி அனுப்பினார். “திரிகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தி வருகிறேன். எனது முடிவை யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க இருக்கிறேன். எனவே அதுவரை கெடுவை நீடிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

உடனே ராஜீவ் காந்தி, இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் தொடர்பு கொண்டு பேசினார். பிரபாகரன் கேட்டுக் கொண்டபடி, “கெடு” மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டது. பிரபாகரன் அறிவித்தபடி யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடந்தது. பிரபாகரன் சார்பில்விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் குழுவைச் சேர்ந்த யோகி இக்கூட்டத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

“இந்தியா _ இலங்கை ஒப்பந்தத்தின்படி ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதிக்கிறோம். இது எங்கள் பலவீனத்தைக் காட்டுவது ஆகாது. மக்களைக் காக்கவே ஆயுதம் ஏந்தினோம். மக்கள் நலனுக்காகவே இப்போது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதிக்கிறோம்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

பிறகு பிரபாகரன் பேசினார். “நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்தியாவுடன் போராட மாட்டோம். ஆகவேதான் ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதிக்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பலாய் என்ற விமானப்படை தளத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிரபாகரன் வரவில்லை.

தனது பிரதிநிதிகளாக யோகி உள்பட 3 பேர்களை அனுப்பி வைத்தார். இந்திய ராணுவ தளபதி ஹர்கிரத்சிங், இலங்கை ராணுவ தளபதி சிரில் ரணதுங்கே ஆகியோரிடம், விடுதலைப்புலிகள் 4 வேன்களில் கொண்டு வந்த ஆயுதங்களை ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், சிறையில் இருக்கும் 5 ஆயிரம் விடுதலைப்புலிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இலங்கை அரசு அறிவித்தது.

இதன் பிறகு தமிழ்ப்பகுதிக்கு “இடைக்கால அரசு” அமைக்கப்பட்டது. இதில் சிங்களர்களும் இடம் பெற்றிருந்தார்கள். அதற்கு விடுதலைப்புலிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் குழுவைச் சேர்ந்த தலைவர் திலீபன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

“மன்னார், வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஆயுதம் இன்றி இருக்கும் விடுதலைப்புலிகள் கடத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். எனவே ஆயுதத்தை ஒப்படைப்பது பற்றி மறுபரிசீலனை செய்கிறோம்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சமாதான ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டது.

இலங்கை சிறையில் உள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி திலீபன் உண்ணாவிரதம் இருந்தார். 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவர் மரணம் அடைந்தார். இதனால் தமிழ்ப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இலங்கை அருகே கடலில் சென்று கொண்டிருந்த 17 விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவம் கைது செய்தது. அந்த 17 பேர்களில், 15 பேர் “சயனைடு” விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். மீண்டும் போர் தொடங்கிவிட்டதாக பிரபாகரன் அறிவித்தார்.

விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படையினருக்கும் மோதல்கள் நடந்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். கலவரங்களுக்கு இடையே 1988 டிசம்பர் 19_ந்தேதி இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில் பிரேமதாசா வெற்றி பெற்றார். இலங்கையில் இருந்து அமைதிப்படையை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி இந்திய அரசை பிரேமதாசா கேட்டுக்கொண்டார்.

அதன் பேரில் 1989 டிசம்பர் 31_ந்தேதிக்குள் இந்திய அமைதிப்படை முழுவதும் இலங்கையில் இருந்து வாபஸ் ஆகும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி, இந்திய அமைதிப்படையினர் இந்தியாவுக்குத் திரும்பினர்.

ராஜீவ் காந்தியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்தும், இந்திய அமைதிப்படை வருகை குறித்தும் ஆலோசிக்க, ஆளும் கட்சி “எம்.பி.”க்களின் கூட்டத்தை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா கூட்டினார்.

கொழும்பு நகரில், பாராளுமன்ற கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் இக்கூட்டம் நடந்தது. இதில் ஜெயவர்த்தனா, பிரதமர் பிரேமதாசா, மந்திரிகள், “எம்.பி.”க்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பிரதமர் பிரேமதாசா, பாதுகாப்பு மந்திரி அதுலத் முதலி, மற்றும் 7 மந்திரிகள், 15 “எம்.பி.”க்கள் படுகாயம் அடைந்தனர். அதுலத் முதலியின் வயிற்றில் குண்டுகளின் துண்டுகள் பாய்ந்ததால் அவர் நிலை கவலைக்கிடமாக இருந்தது.

ஜெயவர்த்தனா மயிரிழையில் தப்பினார். காயம் அடைந்த மந்திரிகளில் கீர்த்தி சுப விக்ரமே மரணம் அடைந்தார். குண்டு வீசியவர்கள் ராஜீவ் காந்தி _ ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்க்கும் சிங்கள தீவிரவாதிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 8 சிங்களர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர், பாராளுமன்றத்தில் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட போலீஸ்காரர்கள்.

(mli)

சந்திரனில் மனிதன் நடந்தான்! அமெரிக்கா நிகழ்த்திய அதிசய சாதனை

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சி, மனிதன் சந்திரனுக்குச் சென்று கால்பதித்து நடந்ததுதான். பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சந்திரன். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு, தண்ணீர் முதலியவை அங்கு இல்லை. எனவே, மனிதன் சந்திரனுக்குப்போய் வருவது என்பது நடக்க முடியாத காரியம் என்றே நீண்ட காலமாக எண்ணப்பட்டு வந்தது.

ஆயினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சிகளில், அமெரிக்காவும், ரஷியாவும் 20_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டன.

ரஷியாவின் சாதனை

விண்வெளிச் சோதனையில், ஆரம்ப வெற்றிகள் ரஷியாவுக்கே கிடைத்தன. வானவெளியில், பூமியைச் சுற்றி முதன் முதலில் விண்வெளிக் கப்பலை (“ஸ்புட்னிக்”) பறக்கவிட்டது ரஷியா தான். 1957_ம் ஆண்டு அது பூமியைச் சுற்றிப் பறந்தது.

பின்னர் 12_4_1961_ல் காகரின் (வயது 27) என்ற ரஷிய வானவெளி வீரர் ராக்கெட்டில் பூமியைச் சுற்றிப் பறந்துவிட்டு பத்திரமாகத் திரும்பி வந்தார். (இந்த மாபெரும் சாதனையாளர், பின்னர் விமான விபத்து ஒன்றில் பலியானார்). 5_5_1961_ல் ஷெப்பர்டு என்ற வானவெளி வீரரை ராக்கெட்டில் அமெரிக்கா அனுப்பியது. அவர் பூமியைச் வெற்றிகரமாகச் சுற்றினார்.

வானவெளியில் பூமியைச் சுற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் வாலண்டினா தெரஸ்கோவா (வயது 26). ரஷியாவைச் சேர்ந்த இவர் 16_6_1963_ல் பூமியைச் சுற்றிப் பறந்தார்.

இப்படி வானவெளி ஆராய்ச்சிகளில் ரஷியா முன்னணியில் இருந்தபோதிலும், “சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் வெற்றி பெறப்போவது அமெரிக்காதான்” என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கூறினார்.

அவர் சொன்னபடியே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ம்ஸ் டிராங் என்ற வானவெளி வீரர்தான் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன். இந்த அதிசயம் 1969 ஜுலை 21_ந்தேதி நடந்தது. அன்று அமெரிக்க வான வெளி வீரர்கள் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கினார்கள். சந்திரனில் முதன் முதலாக நடந்த பெருமை ஆர்ம்ஸ் டிராங்கை சாரும்.

இருவரும் 21 மணி 36 நிமிடம் 21 விநாடிகள் சந்திரனில் இருந்துவிட்டு, 48 பவுண்டு எடையுள்ள கற்களை சந்திரனில் இருந்து எடுத்துக் கொண்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:-

15_7_1969:_ சந்திரனுக்கு மனிதன் செல்லும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஒத்திகைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. நாளை புறப்படுகிறார்கள்.
16_7_1969 இரவு 7_02 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது. கென்னடி முனையில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அதில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோர் இருந்தனர்.

17_ந்தேதி: ராக்கெட் சந்திரனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாதி தூரத்தை ராக்கெட் தாண்டி விட்டது. ராக்கெட்டில் இருக்கும் 3 பேரும் நலமாக இருப்பதாகவும், சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பூமிக்கு தகவல் கொடுத்தனர். ராக்கெட்டின் வேகம் மணிக்கு 3,500 மைல்.

18_ந்தேதி: சந்திரனை ராக்கெட் நெருங்கிவிட்டது.

19_ந்தேதி: பூமியில் இருந்து 2 லட்சம் மைல்களை கடந்து ராக்கெட் சந்திர மண்டலத்துக்குள் புகுந்தது. சந்திரனை ராக்கெட் சுற்றத்தொடங்கியது.

20_ந்தேதி: மாலை 6_30 மணி அளவில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் “தாய் ராக்கெட்”டில் இருந்து, சந்திரனில் இறங்கும் குட்டி ராக்கெட் (“பூச்சி வடிவ வண்டி”)டுக்குள் சென்றனர். பிறகு 11.47 மணிக்கு தாய் ராக்கெட்டுடன் இருந்து குட்டி ராக்கெட்டை பிரித்து சந்திரனை நோக்கி பயணமானார்கள். தாய் ராக்கெட்டில் காலின்ஸ் இருந்தார்.
குட்டி ராக்கெட் 2 மணி நேரம் பறந்து சென்று நள்ளிரவு 1.47க்கு சந்திரனில் இறங்கியது. ஆர்ம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் பூச்சி வண்டிக்குள்ளேயே விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.

21_ந்தேதி உலகமே வியக்கும் அதிசயம் நடத்தப்பட்டது. அன்று காலை 8_26 மணிக்கு பூச்சி வடிவ வண்டியின் கதவை திறந்து ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் காலை வைத்தார். நிலாவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர்.

பிறகு ஆல்ட்ரினும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். இருவரும் சந்திரனில் சிறிது தூரம் நடந்தார்கள். சந்திரனில் கல், மண் முதலியவற்றை சேகரித்தார்கள். பிறகு சந்திரனில் அமெரிக்க கொடியை நாட்டினார்கள். அதோடு தாங்கள் சந்திரனில் இறங்கியதை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை பதித்தார்கள்.

அவர்கள் இருவரும் மீண்டும் பூச்சி வடிவ ராக்கெட்டுக்கு வந்து தாய் ராக்கெட்டுடன் இணைந்தார்கள். பிறகு பூமியை நோக்கி புறப்பட்டனர். 24_ந்தேதி:_ இரவு 10_19 மணிக்கு அந்த ராக்கெட் பத்திரமாக கடலில் வந்து இறங்கியது. உலகமே அவர்களை பாராட்டியது.

சந்திரனில் மனிதன் இறங்கிய சோதனை வெற்றி பெற்றுவிட்டதால் அமெரிக்கா தொடர்ந்து ராக்கெட்டுகளை பறக்கவிட்டது. அடுத்து சென்ற அமெரிக்க வான வெளி வீரர்கள், சந்திரனில் சிறு வண்டியை ஓட்டிச்சென்று பல்வேறு சோதனைகளை நடத்தினார்கள்.

ஆனால், சந்திரனில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்பதால், அதன் பிறகு சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் அமெரிக்கா அதிகம் கவனம் செலுத்தவில்லை.

(mli)